Sunday 21 December 2014

முத்துக்குவியல்-33!!

ரசித்த முத்து:

உச்சரிப்பு சரியில்லை. பேசினாலே இலக்கணப்பிழைகள் அதிகம்.  கூடவே ஒருமைக்குத்தாவும் மரியாதையின்மை.  இப்படி யாராவது குறுக்கே வந்தால் நமக்கு எரிச்சல் வருகிறது. கோபம் வருகிறது. சில சமயம் கை நீட்டும்போது கோபம் தலைக்கேறுகிறது.



ஆனால் இதுவே ஒரு மழலைப்பிஞ்சென்றால் நமக்கு ஏன் அத்தனையும் இனிமையாகவே இருக்கிறது?  'தொப்'பென்று தன் பிஞ்சுக்கையால் ஒரு அடி அடித்தால் ஏன் அது மட்டும் பூமாலை மேலே விழுந்தது போல அத்தனை சுகமாக இருக்கிறது?

சிறிய சமையல் முத்து:

ஐந்து நிமிடத்தில் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு விட்டு ஒரு சட்னி செய்யலாம். இதற்கு நாங்கள் 'அவசர சட்னி' என்று தான் பெயர் வைத்திருக்கிறோம்! சற்று பெரிய தக்காளி ஒன்று, பெரிய வெங்காயம் 2, புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு, வற்ற‌ல் மிளகாய் 8 இவற்றை உப்பு சேர்த்து நைய அரைக்கவும். ஒரு தாளிப்புக்கரண்டியில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து நாலைந்து சிறிய வெங்காயங்களை பொடியாக அரிந்து சிறிது கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு வதக்கி சட்னியில் கொட்டவும். தோசைக்கு அத்தனை சுவையாக இருக்கும் இந்த சட்னி!

கேள்வி முத்து:

சில வருடங்களுக்கு முன்பு ஜெயா தொலைக்காட்சியில் பாலச்சந்தர் இய‌க்கத்தில் சிந்து பைரவி 2 என்ற 'சஹானா' என்ற சீரியல் வெளியாகிக்கொண்டிருந்தது. நான் இதை எப்போதாவது நின்று சில காட்சிகளைப்பார்த்திருக்கிறேன். அந்தக் காட்சிகள் எல்லாமே பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த சில காட்சிகள் தான். அதில் ஒரு காட்சியில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ரசனையுடன் கவனிக்க பிரகாஷ் ராஜ் வசன நடையில் பாடுவார். பிரபல் பாடகர் ஓ.எஸ்.ஆருண் அதற்குப்பாடினார் என்று நினைக்கிறேன். அந்த பாடல் எப்படி ஆரம்பிக்கும், அதன் ஆரம்ப வரிகள் என்ன‌ என்பதை யாராவது சொல்ல முடியுமா?

குறிப்பு முத்து:



தும்பை இலைகளை காய வைத்து பொடித்து தணலில் போட்டால் வரும் புகைக்கு கொசுக்கள் ஓடி விடும்.

மருத்துவ முத்து:



இது ஒரு சகோதரியின் அனுபவமாக ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன். அவருடைய மகனுக்கு மெட்ராஸ் ஐ வந்திருக்கிறது. அந்த வலியோடு நண்பர்களை அழைத்துக்கொண்டு அவருடைய மகன் கடலில் குளித்து விட்டு வ‌ந்திருக்கிறார். மறு நாள் விழிக்கும் போது மெட்ராஸ் ஐ வ‌ந்த சுவ‌டே இல்லையாம். அதனால் உப்பு நீர் மெட்ராஸ் ஐயை குண‌ப்படுத்துகிறது என்பதைப்புரிந்து கொண்டு, சில நாட்களில் அவர் கண‌வருக்கு மெட்ராஸ் ஐ வந்ததும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை விட்டு நாலைந்து தடவை கண்க‌ளை கழுவச்சொல்லியிருக்கிறார். அவர் கணவருக்கும் வந்த மெட்ராஸ் ஐ உடனேயே மறைந்து விட்டதென எழுதியிருக்கிறார் அந்த சகோதரி!!

அதிர்ச்சியடைய வைத்த முத்து:

சமீபத்தில் படித்தேன். ஒரு பெண் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தபோது இரவில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இத்தனைக்கும் அவரின் சகோதரி அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விழித்த போது தான் தெரிந்திருக்கிறது பின்னால் தொங்க விட்டிருந்த அவருடைய நீளமான கூந்தல் கழுத்து வரை வெட்டப்பட்டிருக்கிறது என்ற விபரம்.  தனியே பிரயாண‌ங்கள் செய்கிற போது நகைகள், உடமைகள், பணம் மட்டும் தான் இதுவரை பாதுகாக்கப்படுகிற பொருள்களாக இருந்தன. இனி அவற்றோடு கூந்தலையும் பெண்கள் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்போலத் தெரிகிறது!

இசை முத்து:

இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்  இவர்களது ஆழ்ந்த உச்சரிப்பா, மனதை ஈர்க்கும் பாடல் வரிக‌ளா, இந்த வரிகளை இவர்கள் தங்களது தேன் குரலில் பாடிய விதமா, அருமையான இசையமைப்பா, எதுவென்று எனக்கு இனம் பிரிக்கத்தெரிந்ததில்லை, ஆனால் எப்போது கேட்டாலும் அது முடியும் வரை அமைதியாக அப்படியே ரசித்துக்கொண்டிருப்பேன். அதன் காணொளி இதோ. நீங்களும் ரசியுங்கள். ஆனால் இதில் சித்ரா பாடிய பகுதி மட்டும் தான் இருக்கிறது. முழுப்பாடல் கிடைக்கவில்லை.
 

13 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பதிவு
மெட்ராஸ் ஐ க்கு உப்பு நீர் மருந்து அதிசயம்தான் நினைவில் வைத்துக் கொள்கின்றேன்.
நன்றி சகோதரியாரே

Jaleela Kamal said...

முத்துகுவியலில் உள்ள அனைத்து முத்துகளும் அருமை மனோ அக்கா

மெட்ராஸ் ஐக்கு .சும்மா தண்ணீரில் கண்ணை கழுவுவோம் உப்பு தண்ணீரில் கண்ணை கழுவது உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் .

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து முத்துக்களையும் ரசித்தேன்....

பல முத்துக்கள் பயனுள்ளவை... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமையான முத்துக்கள்.

அதிர்ச்சியடையவைத்த முத்து ஆச்சர்யமாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான முத்துக்குவியல்....மெட்ராஸ் ஐக்கு உப்புத்தண்ணீர் மருந்தாவது...புதிய விஷயம்...

சித்ரா பாடல் மிகவும் ரசித்தொம்...

saamaaniyan said...

முத்துக்குவியலின் அனைத்து முத்துக்களும் அழகு என்றாலும் அந்த மழலை முத்தின் அழகு...

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

ஸ்ரீராம். said...

அவசரச் சட்னி புளி சேர்க்காமல் செய்வோம்.

கேள்வி முத்துக்கு பதில் தெரியவில்லையே...

இந்த தடவை வந்த மெட்ராஸ் ஐ கொஞ்சம் ஸ்பெஷல்! சற்றே கடுமையானது!

பாடல் இப்போதுதான் கேட்கிறேன். அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான முத்துகள்......

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

அனைத்து முத்துகளும் அருமை.

unmaiyanavan said...

எல்லா முத்துக்குவியலுமே அருமை.
அந்த கூந்தல் செய்தியை படித்தவுடன் பகீரென்றாகிவிட்டது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பயனுள்ள குறிப்புகள். அத்தனையும் முத்துக்கள். நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அனைத்து முத்துக்களும் அருமை அம்மா...

Thulasidharan V Thillaiakathu said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடனும், நட்புடனும்

துளசிதரன், கீதா