Thursday 28 December 2017

அசத்தும் முத்து!!!

சில மாதங்களுக்கு முன் ஒரு கனவுப்பள்ளியைப்பற்றி படிக்க நேர்ந்தது. படிக்கப்படிக்க மனம் பிரமித்துப்போனது. இது போன்ற பள்ளிகள் நம் தமிழ்நாடெங்கும் கிளைகள் பரப்பினால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே சுகமாக இருக்கிறது. அந்த விவரங்களைத்தான் இங்கே பகிர்கிறேன். படித்துப்பாருங்கள்!

சரங் பள்ளி

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக உள்ள அட்டப்பாடி மலைப்பகுதியில் 800 மீட்டர் உயரத்தில் இயற்கை மற்றும் வாழ்வியல் கல்வியை அளிக்கிறது சரங் பள்ளி. இந்தப்பள்ளியின் நிறுவனர்களான கோபாலகிருஷ்ணனும் விஜயலக்ஷ்மியும் வருமானம் தரும் அரசு ஆசிரியர்கள் வேலையை விட்டு விட்டு ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதற்காக இந்தப்பள்ளியைத் தொடங்கினார்கள்.




கடந்த 50 ஆண்டு கால கல்வி வளர்ச்சியில் நகர்மயமாதல், எந்திர மயமாதல் ஆகியவற்றால் நாம் இயற்கையை அழித்து தூள் தூளாக்கி விட்டோம். அவற்றை மீட்டெடுத்து இயற்கையையும் அதன் ஆற்றலையும் பற்றிய நிதர்சனத்தை இன்றைய இளைய தலைமுறை குழந்தைகளுக்கு கொண்டு செல்வதே சரங் பள்ளியின் நோக்கம்.

சிந்திக்கும் ஆற்றலில் மற்ற பள்ளிக்குழந்தைகளை விட இந்தப்பள்ளிக் குழந்தைகள் ஒரு படி மேல் உள்ளனர் என்பது தான் சுவாரசியமான விஷயம். முதலில் இந்தப்பள்ளி உருவான கதையே அசத்தும் விஷயமாக இருக்கிறது.

அட்டப்பாடியில் எவ்வளவு மழை பெய்தாலும் அத்தனையும் கடலுக்குள் சென்று வீணாகி விடும். காரணம் காடுகள் அழிக்கப்பட்டது தான். எனவே வனத்துறை, அரசால் தண்ணீர் இல்லாத, விவசாயத்துக்கு லாயக்கில்லாத இடம் என்று கை விடப்பட்ட காட்டு நிலத்தில் 12 ஏக்கர் இடத்தை இவர்கள் வாங்கினர். நிலத்தை சமனப்படுத்தி மக்கிப்போன மரங்களை குறைந்த மண் உள்ள இடத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மக்கச்செய்தார்கள். வெறும் கட்டாந்தரையாக இருந்த இடத்தில் மண் வளம் சேரத்தொடங்கியது. இதற்காக சிறுவாணியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து சில வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.




இப்படியே தூர்ந்து போன நீர்நிலைகளை சரி செய்து கற்கள், மூங்கில்கள் கொண்டு தடுப்பணைகளை உருவாக்கினார்கள். 1983ஆம் ஆண்டு முதல் சரங் பள்ளியை கற்றுக்கொள்ளும் இடமாக மாற்றத் தொடங்கினர். முதலாவது மாணவனாக இவர்கள் மகனே கற்களை அகற்றுவது, மரக்கன்றுகளை நடுவது என வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். பிறகு நண்பர்கள், உறவினர்கள் என்று கைகோர்க்க சரங் வளரத்தொடங்கியது. சரங்’ பள்ளி பசுஞ்சோலையாக மாறத்தொடங்க பாடங்கள் மாணவர்களே கற்றுக்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.

8 ஏக்கர் பரப்பளவில் காடுகள் உருவாகின. விவசாயம் செய்ய ஆரம்பித்து, மாணவர்களுக்கான காய்கறிகள் பயிரிடப்பட்டன. மண், புல், மூங்கில் கொண்டு வீட்டுகள் கைகளால் வடிவமைக்கப்பட்டன. இதில் அங்கே கற்க வருகிற சின்னஞ்சிறு குழந்தைகளும் அடக்கம். குழந்தைகள் பெளதிகத்தையும் இரசாயனத்தையும் உயிரியலையும் பார்ப்பதன் மூலம், உணர்வதன் மூலம், செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கற்று வருகிறார்கள்.
தொடர் விவசாயத்தால் அங்கே மண் வளம் மீண்டது. தூர்ந்து போன நீர்நிலைகளில் நீர் வளம் மிகுந்தது. பசுமை வளர்ந்ததும் வெளியேறிய முயல், மான், நரி போன்ற உயிரினங்கள் மெல்ல தங்’கள் இருப்பிடத்திற்கு திரும்பத்தொடங்கின. சரங்’ பள்ளி நிறுத்தத்தில் தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் வந்து நின்று செல்லத்தொடங்கின.



சோலார், பானல்கள் மூலம் இங்கே மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். இந்தப்பள்ளியில் தங்குவதற்கான வசதிக்கான இடங்களை காட்டில் கிடைக்கும் மூங்கில்கள் கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள்.

இப்போது மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள் அங்கு கற்று வருகின்றார்கள்.

சரங் பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுடன் எந்த வகையில் போட்டி போட்டாலும் வெற்றி பெற முடியும். இங்கு இயற்கையுடன் இணைந்து வாழும் குழந்தைகளின் மகிழ்ச்சியை நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகளின் மகிழ்ச்சியுடன் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.
ஆனால் இந்தப்பள்ளியும் பிரச்சினைகளை சந்தித்தது. 1995 ம் ஆண்டு மீள முடியாத கடன் தொல்லையாலும் வேறு சில உள்பிரச்சினைகளாலும் இந்தப்பள்ளியை மூட வேண்டியதாகி விட்டது. அத்தனையும் இவர்களுடைய மக்களால் சரியாக்கப்பட்டு, 2013ல் மறுபடியும் திறக்கப்பட்டிருக்கிறது.

இங்கே படிக்கும் மாணவர்கள் இங்கே முழு நேரமாகவும் படிக்கலாம். மற்ற பள்ளிகளில் படித்துக்கொண்டும் இங்கே படிக்கலாம். மலையும் மழைச்சாரலும் உயிரினங்களும் இயற்கையும் தான் ஆசிரியர்கள். இதன் நிறுவனர்களான கோபாலகிருணனும் விஜயலக்ஷ்மியும் வழிகாட்டுனர்கள். மட்டுமே. பெற்றோர்கள் விரும்பினால் இங்கே வந்து தங்கி கல்வி கற்பிக்கும் முறைகளைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.

23 comments:

Avargal Unmaigal said...


நல்லதொரு பகிர்வு... இப்படிபட்ட முயற்சிகள் பலருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் அது மட்டுமல்லாமல் அரசாங்கம் இந்த மாதரி முயர்சிகளுக்கு ஆதரவு கொடுத்து மேலும் வளர்ச்சி அடைய வழி வகைகள் செய்ய வேண்டும்

Angel said...

ஆசையா இருக்கு உங்க பதிவை படித்து அங்கே சென்று அந்த இனிய சூழலை நேரில் அனுபவிக்கணும் .பகிர்வுக்கு நன்றிக்கா

KILLERGEE Devakottai said...

நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய மனிதர்கள்
போற்றுவோம்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல மனம் கொண்ட அந்த இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். நேரில் சென்று வர வேண்டுமென்று ஆவல் வந்திருக்கிறது.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அம்மா...

ஸ்ரீராம். said...

இப்படியும் சில மனிதர்கள் தேவையாய் இருக்கிறது நம் பூவுலகுக்கு. அரசாங்கம் செய்யத் தவறுவதை இவர்கள் செய்து விடுகிறார்கள்.​

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பெருமுயற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ள இப்பெருமக்களுக்குப் பாராட்டுகள். பகிர்ந்தமைக்கு நன்றி.

பூ விழி said...

நல்ல விஷயம் குழந்தைகளின் ஆற்றல் வெளிப்பட பகிர்ந்தர்க்கு நன்றி சிஸ்

துரை செல்வராஜூ said...

சிறப்பான பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர்கள்..
காலம் இவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கின்றது..

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் அருமையான கருத்துக்களுக்கும் அன்பு நன்றி மதுரைத்தமிழன்!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஏஞ்சலின்! எனக்கும்கூட இங்கே போய் அந்த சூழ்நிலையை அனுபவிக்க வேண்டும்போல இருந்தது இந்த விபரங்களைப்படித்த போது!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

சத்தியமான வார்த்தை! போற்றுதல்களுக்குரிய மனிதர்கள் இவர்க்ள்! நிச்சயம் போற்றுவோம் சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பூவிழி!

இளமதி said...

பெருமைக்குரியவர்கள் இவர்கள்!
நல்ல தொண்டு மனம் கொண்ட இருவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

அருமையான பதிவு அக்கா!
உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Yarlpavanan said...

சிறந்த பதிவு, சிந்திப்போம்

இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

இராய செல்லப்பா said...

இப்படியும் நல்ல மனிதர்கள் நமக்கு நடுவில் இருக்கிறார்கள் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. காடுகள், மலைகள் நடுவே கல்வியைப் போற்றும் முயற்சி பாராட்டுக்குரியது. அங்கு சென்று பார்த்துவர வேண்டும். அதற்குத் தில்லையகத்து துளசிதரனைத்க் துணைகொள்ளவேண்டும்.... முயற்சிக்கலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா இந்தப் பள்ளியைப் பற்றி ஆனந்த விகடன் என்று நினைக்கிறேன் அதில் வந்திருந்தது. உறவினர் வீட்டிற்குச் சென்ற போது வாசித்த நினைவு....

இவர்கள் முதலில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அரசு அங்கீகாரம் பெறவும் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பிள்ளைகளைச் சேர்ப்பதிலும் கூட. அதாவது புரிய வைத்து எல்லா பெற்றோர்கலும் நார்மல் பள்ளிகளுக்கு அனுப்புவதைத்தானே விரும்புகிறார்கள்..அதனால் இஅவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ரொம்பவே உழைத்தார்கள்...இடையில் மூடப்பட்டுத் திறக்கப்பட்டது.

அவர்கள் மகனும் உழைத்திருக்கிறார்...அருகிலிருந்த ஆற்றிலிருந்தும் தண்ணீர் கொண்டுவந்து என்று பலவிதமாக உழைத்து...நல்லவிதமாக வளர்ந்து வருகிறது. அரசின் பார்வை பட்டால் நல்லது ஆனால் அரசின் பார்வை படும் போது அதில் அரசியல் கலக்காமல் இருக்க வேண்டும்....கேரளத்து அரசு தமிழ்நாட்டு அரசைப் போல் இல்லாததால் உதவி அளித்தால் நலல்தே....

நானும் நேரில் சென்று காண வேண்டும் என்று நினைத்தாலும் எப்போது அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை அக்கா...துளசி வந்ததும் இதனைக் குறிப்பிட்டு அவரது கருத்தையும் தரச் சொல்கிறேன்...

நல்ல பதிவு அக்கா...

கீதா